பதிவு செய்தலும் இரத்துச் செய்தலும்

பதிவு செய்தலும் இரத்துச் செய்தலும்

நான் வீட்டை மாற்றிக்கொண்டால் நான் மாறியதை மற்றும் வெளி யேறுவதை எங்கு அறிவிப்பது?

நீங்கள் அதே உள்ளுராட்சிசபையில் வீடு மாறினால் வதிவிட நிலையத்தில் முகவரியை மாற்றிக் கொண்டால் போதும். நீங்கள் வேறு உள்ளுராட்சிசபைக்கு மாறினால், நீங்கள் 14 நாட்களுக்குள் பழைய உள்ளுராட்சிசபையில் வெளியேறியதையும் புதிய உள்ளுராட்சிசபையில் நீங்கள் குடியேறியதையும் பதிவு செய்ய வேண்டும். அதிகமான உள்ளுராட்சிசபையில் நீங்கள் நேரடியாக வதிவிட நிலையத்திற்கு சென்று இதைச் செய்து கொள்ளவேண்டும். பின்வரும் பத்திரங்களை எடுத்துச் செல்ல மறவாதீர்கள்:

 

  • செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை.
  • இருக்குமாயின் வெளிநாட்டவர் அடையாள அட்டை, இல்லா விடின் ஒரு கடவுச்சீட்டுப் படம்.
  • வசித்த நகரப் பத்திரம், தனிப்பட்ட அல்லது தம்பதிகளினது (வசித்த நகரப் பத்திரம் நீங்கள் முன்பு வசித்த உள்ளுராட்சிசபையினால் வழங்கப்பட்டிருக்கும். ஒரு புதிய நகரப் பத்திரத்தை நீங்கள் உங்கள் புதிய உள்ளுராட்சிசபையில் பெற்றுக்கொள்ளலாம்)
  • உங்களுக்குப் பிள்ளைகள் இருப்பின் குடும்ப அட்டை (பிரதி)
  • ஒரு சுவிஸ் மருத்துவக் காப்புறுதியில் காப்புறுதி செய்யப்பட்டுள்ள அத்தாட்சி

 

சுதந்திரமாக நடமாடும் ஒப்பந்தத்தின் படியாக EU/EFTA நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு சுவிஸ் ஆண்கள் மற்றும் பெண்களைப் போன்ற அதே விதிகள் அமுலில் இருக்கும். ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்கள் மூன்றாவது நாட்டிலிருந்து வந்து ஒரு வதிவிட அனுமதியைக் கொண்டிருந்தால், நேரகாலத்துடன் உள்ளுராட்சிசபையிலுள்ள வதிவிடத் நிலையத்தில் அல்லது மாநில குடிவரவாளர்கள் திணைக்களத்தில், வீடு மாறும்போது எவ்விதமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது விசேடமாக மாநிலத்தை மாற்றிக் கொள்பவர்களுக்குப் பொருந்தும், வேறு மாநிலத்தில் வசிப்பதற்கு வழமையாக ஒரு புதிய வதிவிட அனுமதி தேவைப்படும்.