தொழில் ரீதியான முற்பாதுகாப்பு

தொழில் ரீதியான முற்பாதுகாப்பு

தொழில் ரீதியான முற்பாதுகாப்பு (2வது தூண்)எவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது) ?

வயோதிப முற்பாதுகாப்பு 1வது தூண் என்பது AHV. இது ஒருவர் மற்றவரைப் பராமரிப்பது எனும் கொள்கையில் இயங்குகின்றது. தொழில் புரியும் சந்ததி, ஓய்வுபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியத்தைச் செலுத்துகின்றனர். AHV- ஓய்வூதியத்தை மேலும் உயர்த்துவதற்கு, தொழில் ரீதியான முற்பாதுகாப்பு எனப்படும் 2வது தூண் உள்ளது. இது முற்பாதுகாப்புச் சேமிப்பு எனும் முறையில் இயங்குகின்றது: நீங்கள் ஒரு பங்களிப்பை செலுத்துகின்றீர்கள் பின்பு நீங்கள் ஓய்வுபெற்றதும், நீங்கள் செலுத்திய பங்களிப்புக்கு அமைவாக ஒரு மேலதிக ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

 

தொழில் ரீதியான முற்பாதுகாப்பை பல வகையான ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் காப்புறுதிகள் ஒழுங்கு செய்கின்றன. AHV போன்று அனைத்து நியமனம் பெற்ற தொழிலாளர்களும் கட்டாயமாக ஒரு ஓய்வூதிய நிதியத்தில் காப்புறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் விதிவிலக்குகளும் உள்ளன, உதாரணமாக தற்சமயம் நீங்கள் ஒரு வருடத்திற்கு 21.150 பிராங்குகளிற்கு குறைவாக ஊதியம் பெற்றால் (நிலை தை 2016). சொந்தமாகத் தொழில் செய்வோருக்கு தொழில் ரீதியான முற்பாதுகாப்புக் கட்டாயமாக இல்லை, அவர்கள் சொந்த விருப்பில் ஒரு ஓய்வூதிய நிதியத்தில் சேர்ந்து கொள்ளலாம். சொந்தத் தொழில் செய்வோருக்கு அதிகமாக பொருண்மிய நிறுவனங்கள் இவ்வாறான ஓய்வூதியத்தை ஒழுங்கு செய்திருக்கும்.

 

உங்கள் ஓய்வூதிய நிதியத்திலிருந்து வருடாந்தம் ஒரு அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள், அதில் வேறு விடயங்களுடன், நீங்கள் எவ்வளவு பணம் இதுவரை சேமித்துள்ளீர்கள் மற்றும் அந்தப் பணத்துடன் நீங்கள் எவ்வளவு ஓய்வூதியத்தைப் பெறலாம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். முழுமையாகச் சேமித்த பணத்தை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்துமாறு கோர முடியும்: உதாரணமாக, நீங்கள் சுவிசை விட்டு நிரந்தரமாக வெளியேறினால் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தை ஆரம்பித்தால். இவ்வாறான முடிவை மேற்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் நன்றாக ஆலோசனை செய்து கொள்ள வேண்டும்.