முக்கியமானது என்னவென்றால் பாடசாலை குறித்து உங்கள் அக்கறை மற்றும் உங்கள் பிள்ளை எவற்றைக் கற்கிறது என்பதாகும். உங்கள் மகன் அல்லது மகளிடம் இயலுமானவரை அடிக்கடி «இன்று பாலர் பாடசாலை/ பாடசாலை எவ்விதம் இருந்தது?» அல்லது «நீங்கள் என்ன செய்தீர்கள்» எனக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையால் எதையாவது நிறைவேற்ற முடியும்போது அவர்களுடன் சேர்ந்து மகிழுங்கள். அதேவேளை பிரச்சினையாக உள்ள விடயங்களில் நீங்கள் உற்சாகம் கொடுங்கள்.
பாடசாலையின் பின்பு ஒழுங்காக (ஒரே இடத்தில் மற்றும் ஒரே நேரத்தில்) தடைகள் ஏதும் இன்றி வீட்டுப்பாடங்களைச் செய்வதைக் கவனத்திற் கொள்ளுங்கள் (தொலைக்காட்சி மற்றும் வானொலியினால் தடை இருக்ககூடாது).
உங்கள் பிள்ளை சரியான நேரத்திற்குப் படுக்கைக்குச் செல்வதையும் காலையில் நன்கு ஓய்வெடுத்து எழுவதையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை சிறிது உண்பதையும் இடையே உண்பதற்கு இடை வேளை உணவு ஏதாவது பாடசாலைக்கு எடுத்துச் செல்கின்றதா என்பதைக் கவனித்துக் கொள்ளவும். அதிகம் தொலைக்காட்சி மற்றும் கணனியில் விளையாடும் பிள்ளைகள், அவதானக் குறைவுப் பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள். ஆகவே உங்கள் பிள்ளையின் நன்மை கருதி காலஎல்லையை வகுத்துக் கொள்ளுங்கள்.
பாடசாலை உலகம் மற்றும் குடும்ப உலகம் பல வித்தியாசமுள்ளவைகளாக இருக்கலாம். ஆகையால் சில வேளைகளில் பிள்ளைக்கு இந்த இரு உலக விதிகள் மற்றும் பெறுமதிகளை விளங்கிக் கொள்வது கடி னமாக இருக்கலாம். ஆகவே பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பராமரிக்கும் நபர்கள்; தொடர்பைப் பேணுவது மற்றும் ஒன்றுசேர்ந்து செயற்படுவது அவசியமானது. பெரியோர்களுக்கு இடையே சேர்ந்து இயங்குவது சிறப்பாக அமைந்தால், பிள்ளை மிக இலகுவாக தனது படிப்பில் கவனம் செலுத்த முடியும்.