மருத்துவக் காப்புறுதி

மருத்துவக் காப்புறுதி

யார் மற்றும் எவை மருத்துவக் காப்புறுதியில் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது?

சுவிசில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் கட்டாயமாக மருத்துவக் காப்புறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் நோயுற்றாலோ, தாய்மை நிலை அடைந்தாலோ அல்லது ஒரு விபத்தைச் சந்தித்தாலோ அதன் செலவுகளுக்கு மருத்துவக் காப்புறுதியால் காப்புறுதி செய்யப்பட்டுள்ளீர்கள். அதாவது, நீங்கள் வைத்தியரிடம் செல்லும்போது, வைத்திய சாலையில் இருக்கும்போது அல்லது குறிப்பிட்ட மருந்து வகைகளுக் கு ஒரு சிறிய பகுதிச் செலவைச் செலுத்த வேண்டியிருக்கும். மிகுதியை மருத்துவக் காப்புறுதி செலுத்தும்.

 

அடிப்படைக் காப்புறுதி என அழைக்கப்படுவது கட்டாயமானதாகும். மருத்துவக் காப்புறுதிகள் ஒவ்வொரு நபரையும் அவர் எந்த வயது மற்றும் உடற்சுக நிலையில் இருந்தாலும் அடிப்படைக் காப்புறுதியில் பதிந்து கொள்ள வேண்டும். காப்புறுதி செய்யும் நபர் தனது மருத்துவக் காப்புறுதியை விரும்பியவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.

 

அடிப்படைக் காப்புறுதியில் அனைவரும் சமமான சேவைக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளார்கள். உதாரணமாக வைத்தியரின் சேவை நிலையத்தில் அல்லது வைத்திசாலையில் சிகிச்சை, வைத்தியரால் எழுதப்பட்ட மருந்துகள் மற்றும் பரிசோதனைகள், உளவியல்- மற்றும் உடல் வைத்தியம், கருவுற்றிருக்கும் போதான பரிசோதனைகள், தடுப்பூசிகள், பிள்ளைகளுக்கான சுகாதாரப் பரிசோதனைகள் அதேபோன்று அவசரப் போக்குவரத்துச் சேவைக்கான பகுதிக் கட்டணம் போன்றவை இதில் அடங்கும். வழமையான பற் சிகிச்சைகளுக்கு அடிப்படைக் காப்புறுதியில் காப்புறுதி செய்யப்பட்டிருக்காது.

 

நீங்கள் சொந்த விருப்பத்தில் ஒரு மேலதிக காப்புறுதியை செய்து கொள்ளலாம் என்பதுடன் அதற்கு மேலதிக கட்டணங்களையும் செலுத்த வேண்டும். இதனூடாக மேலதிக சேவைகளுக்குப் பணம் செலுத்தப்படும். உதாரணமாக பற் சிகிச்சைகள் அல்லது வைத்திய சாலையில் வசதியான இருவர் உள்ள அல்லது தனி அறை போன்ற வை. அடிப்படைக் காப்புறுதியின் ஊடாக மேலதிக காப்புறுதிகள் இன்றி (= பொதுவான காப்புறுதி) பொதுவான பகுதியில் 4 கட்டில்கள் உள்ள அறைக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.

 

விபத்துக் காப்புறுதி மருத்துவக் காப்புறுதியிலும் அடங்குகின்றது. தொழில் புரிபவர்கள் ஏற்கனவே தமது தொழில் வழங்குனரால் விபத்துக்காகக் காப்புறுதி செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு இப்படியான நிலை இருப்பின், உங்கள் மருத்துவக் காப்புறுதியிடம் உங்களை விபத்துக் காப்புறுதி செய்யப்பட்டிருப்பதில் இருந்து நீக்கிவிடுமாறு கேட்கலாம். இதனால் உங்கள் கட்டணம் குறைவடையும்.