கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் முக்கியமாகத் தொடர்பைக் கொண்டிருக்க
வேண்டிய நபர் பெண்களுக்கான வைத்தியராகும் (பெண் மருத்துவர்)
அவர் ஒழுங்கான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை
மேற்கொள்வர். இதனூடகவே நீங்கள் பிள்ளையின் வளர்ச்சியை
அவதானிப்பதுடன் தாய் அல்லது பிள்ளைக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும்
அறிந்து கொள்ளலாம். அத்துடன் தனியாகப் பணியாற்றும் மருத்துவிச்சிகளும்
(பிறப்பு உதவியாளர்கள்) கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் பிறப்பு குறித்த
கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.
வைத்தியசாலைகளில் மகப்பேற்றிற்கு தயார்படுத்தும் பாடங்கள் உள்ளன. அங்கு
நீங்கள் பிறப்பு, பாலூட்டுவது மற்றும் பெற்றோராகப் பெறவிருக்கும் கடமைகள்
குறித்து பெறுமதியான அனுபவங்களைப் பெறலாம். சுவிசின் சில
பிரதேசங்களில் இந்த வகுப்புகள் பல மொழிகளில்
நடத்தப்படுகின்றன.