பற்றுச்சீட்டுக்களுடன் நீங்கள் வழமையாக ஒரு பணம் செலுத்தும் படிவத்தையும் சேர்த்துப் பெற்றுக்கொள்வீர்கள். பணம் செலுத்துவதற்கு இது உங்களுக்குத் தேவைப்படும். இதில் முக்கிய விபரங்களாக பெற்றுக்கொள்பவரின் பெயர் வங்கிக் கணக்கு செலுத்த வேண்டிய தொகை பற்றுச்சீட்டு இலக்கம் போன்றவை அடங்கியிருக்கும்.
நீங்கள் உங்கள் கட்டணத்தைச் செலுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன:
தபால் நிலையத்தில் நீங்கள் உங்கள் பணம் செலுத்தும் படிவத்தை ஒப்படைத்து அத்தொகையைப் பணமாகவோ அல்லது அதை உங்கள் தபால் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்குமாறோ செய்து கொள்ளலாம். ஒவ்வொருமுறை பணம் செலுத்தும்போதும் அதற்கான பற்றுச்சீட்டைப் பெறுவீர்கள் அல்லது மஞ்சள் நிற தபால் சேமிப்புப் புத்தகத்தில் ஒரு பதிவு மேற்கொள்ளப்படும். நீங்கள் வங்கியின் பணம் செலுத்தும் உத்தரவுப் படிவத்தை நிரப்பி, பணம்செலுத்தும் பத்திரத்துடன் சேர்த்து தபால் மூலமாக உங்கள் வங்கிக்கு அனுப்பிவைத்தால் அவர்கள் அதை செலுத்துவார்கள். வேறு வசதிகளாக E-Banking அல்லது Mobile Banking App ஐ மற்றும் PostFinance App. பாவிப்பது போன்றவை உள்ளன.
பணம் அனுப்புதலில் மிக இலகுவானது வங்கிக் கட்டளை (LSV) மற்றும் தொடர் உத்தரவு வழங்கும் வங்கிக் கட்டளை என்பவையாகும். இதன்மூலம் நீங்கள் தொடர்ந்து வரும் கட்டணப் பற்றுச்சீட்டுக்களை – அதாவது வீட்டு வாடகை, தொலைபேசி அல்லது மருத்துவக் காப்புறுதி – போன்றவற்றை தாமாகவே பெற்றுக்கொள்ள உத்தரவிடலாம். இதுகுறித்து உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் அறிந்து கொள்ளுங்கள்.