சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒருவர் வேலையில்லாமல் திண்டாட நேரிட்டால், அவர் வேலையற்றோருக்கான உதவித் தொகை பெறத் தகுதி உடையவராவார். எனினும், இதற்கான விதிமுறைகளை அவர் முழுமையாகப் பூர்த்தி செய்தல் அவசியம். இதற்கான அடிப்படை விதிமுறை என்னவெனில், செல்லத்தக்க வசிப்பிட அனுமதி மற்றும் வேலையிழப்புக்கு முந்தைய இரண்டாண்டு காலத்தில் 12 மாதங்கள் பணியில் இருந்திருப்பது அவசியம்.
வேலையின்மை பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் பெற, வேலையில்லாதோர் காப்பீட்டு நிதியம் மற்றும் வட்டார வேலை வாய்ப்பு மையங்களை (RAV) தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் வேலையில்லாதவராக அல்லது வேலையை இழக்கும் அபாயம் உள்ளவராக இருந்தால், பின்வருவன மிகவும் முக்கியமானதாகும்:
- நீங்கள் புதிய வேலையைத் தேடுவதற்கான முயற்சியில் இது வரையில் இறங்கவில்லை எனில் இப்போது உடனடியாக இறங்குங்கள். வேலையில்லாதோர் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது உங்களின் வேலை தேடும் முயற்சிகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அது சம்பந்தமான கடிதப் போக்குவரத்து மற்றும் எழுத்துபூர்வ விண்ணப்ப நகல்கள், நிராகரிப்பு கடிதங்கள் போன்றவற்றை பத்திரமாக சேமித்து வைக்கவும்.
- நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு மையத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.