சுவிசில் பாடசாலையின் பின் ஏறத்தாழ மூன்றில் இரு இளையோர் தொழிற்கல்வியைக் கற்றுத் தேறுகின்றனர். இது ஒவ்வொரு தொழிலையும் பொறுத்து 3 அல்லது 4 வருடங்களாக இருக்கும். இத் தொழிற் கல்வியை வெற்றிகரமாகக் கற்றுத் தேறுபவர்களுக்கு ஒரு மத்திய அரச திறமைச் சான்றிதழ் வழங்கப்படும். குறைவான திறமையுள்ள மாணவ மாணவிகளுக்கு இரண்டு வருட தொழிற்கல்வியும் உள்ளது. இவர்கள் மத்திய அரசின் ஒரு தொழிற் பரீட்சையில் தேறி தமது கற்கையை நிறைவு செய்வார்கள்.
சுவிசில் தொழிற்கல்வியைப் பொறுத்தவரை விசேடமானது என்ன வென்றால், பாடசாலையில் கற்பதுடன் தொழிலகத்தில் செய்கை முறைப் பயிற்சி பெறுவதாகும். இதை இரட்டைக் கற்றல் முறை என அழைப்பர். கற்பவர்கள் வழமையாக கிழமையில் நான்கு நாட்கள் தொழிலகத்தில் வேலை செய்வதுடன் - சில தொழில்களுக்கு குறைவான நாட்கள்- அங்கு செய்முறைப் பயிற்சிகளைப் பெறுவர். மிகுதிக் கிழமை நாட்களில் ஒரு தொழில் பயிற்சிப் பாடசாலையில் கற்கை நெறிகளைக் கற்றுக்கொள்வர்.
பாடசாலையில் திறமையாகக் கற்பவர்கள் மேலதிகமாக ஒரு துறை சார் பயிற்சி நிலையத்திற்குச் செல்ல முடியும். இது தொழில் முகாமைத்துவத்துவத்துக்கு இட்டுச்செல்லும். ஒருவர் இதைக் கற்கும் போது அல்லது அதை கற்று முடித்த பின்பும் இதைச் செய்யலாம். துறைசார் கற்கைநெறிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்பவர்கள் பின்பு உயர் கலாசாலைகளுக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் உண்டு.